disabled rightclick


காக்கரட்டான் மருத்துவ பயன்கள்

காக்கரட்டான்

காக்கரட்டான் ஒரு ஏறு கொடி இனத்தை சார்ந்தது. கூட்டிலைகளையும் நீலநிற மலர்களையும் உடையது. இதில் வெள்ளைப்பூ இனமும் இதில் உண்டு. மாமூலி, காக்கணம், காக்கட்டான், சங்குப்பூ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. வெள்ளைப்பூ இனமே மருத்துவ குணத்தில் சிறந்ததாகும். இதன் இலை, வேர், விதை ஆகியவை மருத்துவ குணமுடையது.

ஓதும் பெறும்வயிறு மொவ்வாப் புரைக்குழலும்
தீதுமல நீர்கட்டுந் தீருங்காண் – வா துரைக்கும்
மாந்தமது முட்கிருமி மாண்டுபோம் காக்கணத்தை
மாந்தருட் கொள்ள மகிழ்ந்து

குணம்

காக்கட்டானை உட்கொள்ளப்பெருவயிறு, புரைக்குழல், மாந்தம், மலசலக்கட்டு, மலக்கிருமி சேர்க்கை ஆகியவை நீங்கும் என்க

பயன்கள்

இதன் இலைச்சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து தாங்கக்கூடிய சூட்டில் காது, கன்னம் முதலிய பாகங்களில் பற்றுப்போட சயித்தியத்தினால் ( குளிர்ச்சி ) உண்டான வீக்கம், வலி ஆகியவை நீங்கும்.

இதன் வேர்ப்பட்டையை அரைத்து சாறு எடுத்து 2-3 துளிகள் நாசியில் விட தலைவலி நீங்கும்.
காக்கரட்டான் விதையை நெய்விட்டு வறுத்து பொடிசெய்து 5 கிராம் அளவு எடுத்து சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட நல்ல பேதியாகும். இதனால் தேகத்திலுள்ள துர் நீர் வெளியாகி பெரும்வயிறு, புரைக்குழல் ஆகியவை நீங்கும்.

காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சி சாறு, தேன் 5 மிலி அளவு சாப்பிட உடல் வெப்பம் தணியும்.
இதன் வேரை பாலில் வேகவைத்து, பிறகு பால் விட்டு அரைத்து சுண்டக்காய் அளவு காலை, மாலை பாலில் கலந்து சாப்பிட்டு வர பிரமேகம், மேக வெள்ளை, சிறுநீர் பாதை அழற்சி, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.

Reviews and Comments

Post a Comment